×

ஆந்திர கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற புதுப்பெண் பாறையில் சிக்கி 12 மணி நேரம் தவிப்பு: ஆம்புலன்சை அழைத்துவர சென்ற கணவரும் விபத்தில் சிக்கினார்

திருமலை: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சலிப்பட்டினத்தை சேர்ந்தவர் காவ்யா (24). இவர் பீமாவரம் பகுதியை சேர்ந்த வர்மராஜூ (28) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 2ம் தேதி விசாகப்பட்டினத்திற்கு வந்துள்ளனர். அங்குள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மகளை காணாமல் அவரது பெற்றோர் மச்சலிப்பட்டினம் போலீசில் புகார் செய்தனர். காவ்யாவை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் அப்பிகொண்டா பகுதியில் தங்கியிருந்த புதுமண ேஜாடி, கடந்த 8ம் தேதி அங்குள்ள கடற்கரைக்கு சென்றனர். பாறைகள் மீது ஏறி செல்பி எடுத்துள்ளனர். அப்போது நிலைதடுமாறி பாறைகளுக்கு இடையே காவ்யா விழுந்தார். உயரமான இடத்தில் இருந்து விழுந்ததால் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த காதலன், காதலியை காப்பாற்றாமல் ஆம்புலன்சை அழைத்து வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் வரவில்லை.

இதற்கிடையில் வலியால் துடித்து கதறிய காவ்யா மயக்கமடைந்தார். நீண்ட நேரத்துக்கு பிறகு மயக்கம் தெளிந்த காவ்யா, கடற்கரையில் யாரும் இல்லாததால் இரவு முழுவதும் போராடினார். மறுநாள் கடற்கரைக்கு வந்த மீனவர்கள் சிலர், இளம்பெண்ணை கண்டதும் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்சில் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் காவ்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், செல்பி எடுக்கும்போது கால்தவறி பாறைகளுக்கு இடையில் விழுந்ததாக தெரிவித்தார். மேலும், தன்னை காப்பாற்ற ஆம்புலன்சை அழைத்து வருவதாக கூறிய தனது கணவர் மாயமானதாக கூறினார். அப்போதுதான் ஆம்புலன்சை அழைத்துவர சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி வர்மராஜு படுகாயமடைந்தது தெரிந்தது. அவரும் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இதுதொடர்பாக காவ்யாவின் பெற்றோருக்கு போலீசார் தெரிவித்தனர்.

The post ஆந்திர கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற புதுப்பெண் பாறையில் சிக்கி 12 மணி நேரம் தவிப்பு: ஆம்புலன்சை அழைத்துவர சென்ற கணவரும் விபத்தில் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : AP ,Thirumalai ,Kavya ,Machalipatynaya, Krishna District, AP ,Varmaraju ,Beimavaram ,
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு